அறிவார்ந்த வாழ்வியல்
உலக உயிரினங்களிலேயே மாந்த இனந்தான் ஏற்றமிக்க
வாழ்க்கையமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது.
மாந்த இனத்தைத் தவிர ஏனைய விலங்குயிரிகளின் இயக்கவியல், குறிப்பிட்ட ஒரேவகையான
பாங்கமைப்பைக் கொண்டதாகவே உள்ளது. ஏனெனின்
அவற்றின் வாழ்வியக்கம் இயல்பூக்க (Instinct) அடிப்படையில் மட்டுமே அமைந்திருப்பதுதான்
காரணம். புதிய புதிய செயல்கள் அவற்றால் கற்கப்பெறுவது
இல்லை. ஆனால் விலங்காண்டிக் காலத்தினின்றே
புதியன பற்றி அறியவும், புதிய செயல்களைக் கற்கவும், புதிய ஆக்கங்களைச் செயற்படுத்தவுமான
– திறன் வாய்ந்த மூளையமைப்பை மாந்த இனம் பெற்றுவிட்டது.
இத் திறன்வாய்ந்த மூளையின் துணை கொண்டேதான் இன்றுவரை,
எண்ணிலடங்கா மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் இம் மாந்த இனம் பெற்று வந்தள்ளது.
இத் திறன்மிக்க மூளையைப் பெற்றிருப்பினும், பெரும்பாலான மக்கள் தம் சிந்தனைத் திறனை
வளர்த்துக்கொண்டவர்களாக இல்லை. ஏனெனின், இதற்குக்
காரணம் அம் மக்கள் வாழும் இடத்து, நல்ல கல்விச்சூழல் அமையாததே ஆகும். தலைமுறை தொடர்ந்த
கல்வியை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத - கல்வி மறுப்பும் பெரிய காரணமும் ஆகும். பெருமளவு அறிவியல் வளர்ந்தோங்கிய இக்காலக் கட்டத்திலும், மக்களில்
பெரும்பாலோர் வாழ்வியல் பற்றிய துலக்கம் சிறிதும் இல்லாது செம்மறியாட்டுக் கூட்டமாகவே
வாழ்ந்து வருகின்றனர்.
இதனால்தான் இவர்களின் வாழ்வில் சரியான குறிக்கோளும்
இல்லை; வாழ்வியல் பற்றிய மெய்மமும்(Philosophy) அறியப்படுவதும் இல்லை. தம் வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர்வரும் சிக்கல்களுக்கு
முறையான தீர்வுகாணும் திறனும் இல்லை,
மேற்கூறிய நிலைப்பாட்டில், படித்தவர் படிக்காதவர்
ஆகிய இரு பிரிவினருமே ஒரே இயல்பினராகவே உள்ளனர்.
போதுமான அளவும் அதற்குமேலும் கல்வி பெற்றோரும்கூட, அக் கல்வியைப் பெறாதோர் போன்றே,
சிந்திக்கும் திறன் அற்றவர்களாகவும், சிந்திக்க மறுப்பவர்களாகவும் இருக்கின்றனர், கற்றவர்களாக இருந்தும் பகுத்தறியும் மனப்பாங்கற்றவர்களாகவே
உள்ளனர். எவ்வளவு மெத்தப் படித்த படிப்பாளியாக
இருந்தாலும், ஒரு குறிப்பிட்டத் துறையில் கூர்மையுடையவராக இருந்தாலும் அவர்களின் வாழ்கைக்கும்
பெற்ற கல்விக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
சிந்தனையைத் தூண்டும் கல்வி அல்லது சிந்தனையை
வளர்க்கும் கல்விக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் எவ்வளவு தொடர்பு உள்ளது என்பதை,
வளர்ந்த நாடுகளையே சான்றாகக் கொள்ளலாம். இந்
நாட்டில், கற்கும் கல்விக்கும் சிந்தனைக்கும் உள்ளத்தொடர்பு மிகக் குறைவாகவே உள்ளது. அத்தொடர்பும் மதமேறிய மனநோய்களால் அறுத்தெறியப்படுகின்றது. முன்னேற்றம் முயற்கொம்பாகவே உள்ளது.
எந்த நாட்டுக் குழந்தையாக இருந்தாலும், எந்த
இனக் குழந்தையாக இருந்தாலும் நுண்ணறிவு ஈவில் (Intelligent quotient) பொதுவான விழுக்காட்டு
நிரலளவே உள்ளனர். அப்படி இருந்தும் சில நாடுகள்
மட்டும் வாழ்வியல் வளர்ச்சிப்போக்கில் பின்னடைந்திருக்கக் காரணம் என்ன என ஆராய்ந்து
பார்த்தால் உண்மை புலப்படும்.
அந்த வகையில் இங்குள்ள மாந்தவள ஆற்றல் முளையிலேயே
கிள்ளியெறியப்படுகின்றது. பிற்போக்குத் தன்மையுடைய - நம் குடும்பச்சூழலும், குமுகச்சூழலும்,
மதச்சார்பு மனப்பாங்குடைய ஆசிரியர்கள் நிறைந்த பள்ளிச்சூழலும் குழந்தையின் மனவளர்ச்சியையும்,
அறிவு வளர்ச்சியையும் ஒருசேர சீரழிக்கும் மிகப்பெரிய காரணிகளாகவுள்ளன. வளர்ச்சிப்போக்கில்
அக் குழந்தை, சிந்தனை மழுங்கியவனாக மாற்றப்படுகின்றான். தற்சார்பற்ற, தன்னம்பிக்கையற்றவனாகவும் ஆக்கப்படுகின்றான்.
ஐம்புலன்கள்வழித் தூண்டப்பெற்ற தூண்டல்கள் அனைத்தும்,
மூளையின் உரிய செயற்பாட்டினால் ஒருங்கிணைக்கப்பெற்று உருவாக்கப்படும் கருத்துருவமே
புலன்காட்சி (Perception) எனப்படும். இப் புலன்காட்சி
குழந்தையின் ஐந்து அகவைக்குள் (வயது) பெரும்பாலும் நிலை நிறுத்தப்படுகின்றது. இக் காலக்கட்டம் அக் குழந்தையின் கருத்து உருவாக்கத்திற்கு
(Concept formation) அடிப்படையாகவும் அமைகின்றது.
எதிர்காலத்தில் அக் குழந்தையின் நடத்தை எவ்வாறு இருக்கும் என்பதும் இக் காலக்
கட்டத்தில்தான் தீர்மானிக்கப்படுகின்றது.
கருத்துருவாக்கம் உருவாகும் இப்பருவத்தில்தான்,
வாழ்க்கைக்கு வேண்டாத கடவுள்கள் பற்றிய கதைகளும், பேய், பூதம் பற்றிய கற்பனைகளும்,
அவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கின்ற மூடநம்பிக்கைகள் நிறைந்த கோளாற்று எண்ணங்களும்
– சுற்றிச்சூழ்ந்த பிற்போக்கு மனப்பான்மையரால் குழந்தையின் மூளையில் கருத்தேற்றம்
(Suggestions) செய்யப்பெற்று, திணிக்கப்பெறுகின்றன.
இளமை தொட்டே தொடரும் இவ்வகைக் கருத்தேற்றங்களால்
தாக்கமுறப்பெற்ற இம் மாந்தன், அளவற்ற அச்சவுணர்வுகளுக்கும், ஆட்டிப்படைக்கும் எண்ணங்களுக்கும்
(Obsessive Compulsive Thinking) ஆளாகின்றான்.
இவை அவனின் ஆழ்மனத்திலும் (Unconcious Mind) ஆழப்பதிந்து, நடத்தைக் கோளாறுகளை
உண்டு பண்ணிவிடுகின்றன. இன்றுவரை ஆராய்ந்த
நிலையில், மாந்தரிடையே 323 வகை அச்சங்களையும்(Phobias), 102 வகை வெறிகளையும்
(Manias) கண்டுள்ளனர்.
நல்லறிவு சார்ந்த சூழலே பெரும்பாலும் கிட்டாமையாலும்,
இக் கேடுகெட்ட கருத்துருவாக்கங்களிலேயே தொடர்ந்த தோய்வாலும் இவனின் மூளை நரம்புகள்
முறையற்ற பதிவுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்வியலே குலைவுற்று நிற்கின்றது. சிந்தனைத் திறத்தாலன்றி வேறு எவற்றினாலும் இவனது
நடத்தை, திருத்தமுடியாத அளவுக்கு அழுத்தமிகு ஆக்கநிலையுறுத்த செயல்களாகி (Conditionings)
இவனைச் செயற்படுத்திச் செல்கின்றன. இளமையில்
ஏற்பட்ட பல்வேறு ஆக்கநிலையுறுத்த விளைவுகளின் அடிப்படையில்தான், ஒவ்வொருவரின் விருப்புகளும்
வெறுப்புகளும் வேறுபட்டு நிற்கின்றன. இவ் வகையில்தான்
பலரிடமும் “பயமும் பக்தியும்” உருவாகி உருட்டுகின்றது !.
வாழ்வின் ஊடே தொடர்ந்துவரும் உயிரிழப்பு அச்சம்,
மதிப்பிழப்பு அச்சம், பெருளிழப்பு அச்சம், துணையிழப்பு அச்சம், எதிர்பாராது வரும் இடர்சார்ந்த
அச்சம், ஆகிய காரணங்களின் வழி எழும் மனக்குழப்பங்கள்தான் ஒருவரை சமய மூடப் புதைகுழியிலே
தள்ளி, எப்போதுமே எழாவண்ணம் செய்துவிடுகின்றன.
இவ்வாறான மனநிலையில் வாழும் மக்கள் அவ்வப்பொழுது வரும் துன்பங்களிலிருந்து விடுதலை
பெற, அதை எதிர் கொள்வதைவிடுத்து – சமயஞ்சார்ந்த சடங்குகளை நோக்கியும், சமயப்புரட்டர்களை
நோக்கியும் தஞ்சமடைவது இயல்பாகிவிடுகின்றது.
இயற்கைத் திறத்தால் உருவான – சிறந்த மூளையாற்றலையுடைய
இம் மாந்தன், பின்வரும் மூன்று வகையான உளத்தியல் செயல்பாடுகளினால் எவ்வாறு சிதைந்து
போகின்றான் என்பதைப் பார்க்கலாம்.
1. மருட்சி அல்லது பொய் எண்ணம் (Delusion) : குமூகவியலுக்குப்
பொருந்தாத, ஏரணவியலுக்கு (தருக்கத்திற்கு) (Logic) எடுபடாத, நம்பகத்திற்குரிய அளவில்
சான்றுகள் காட்டவே இயலாத, உண்மைக்குப் புறம்பான – பொய் நம்பிக்கையுணர்வே மருட்சி அல்லது
பொய் எண்ணம் எனப்படுகின்றது. இது அகவயத்தன்மை
(Subjective) உடையதே தவிர புறவயத்தன்மை (Objective) உடையது அன்று. கடவுள் நம்பிக்கை, ஆவி, பேய், பூதம் பற்றிய கருத்துகள்,
மாயமந்திரம், படையல், நல்ல நேரம்-கெட்ட நேரம், ஆகூழ்- போகூழ் (அதிஷ்டம்-துரதிஷ்டம்),
கணியம்(சோதிடம்) ஆகிய இவையும், இவை போன்ற அனைத்தும் மேற்கூறிய மருட்சிசார்ந்த உளக்கோளாறுகளே
ஆகும். இக் கோளாறு நிறைந்தவர்களின் பேச்சுகள்,
பொதுவாக – பகுத்தறிவுக்கு ஒவ்வாத, உண்மைக்குப் புறம்பான, சார்பு எண்ணங்களுக்கு உட்பட்டதாகவே
இருக்கும்.
2. திரித்துணர்வு (Illusion) : மருட்சி
(அ) பொய் எண்ணங்களுக்கு உட்பட்டவர்கள்
எளிதில் திரித்துணர்வுகளுக்கு ஆளாவார்கள்,
மிரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகிவிடும். சாலையில் கிடக்கும் பிய்ந்து போன கயிறும் பாம்பாகத்
தோற்றமளிக்கும். திரித்துணர்வு உடைய ஒருவருக்கு,
இருட்டில் செல்லும்போது ஒரு குத்துச்செடிகூட அவருக்குப் பேயாகக் காட்சியளிக்கும். கொடியில் தொங்கும் சேலைகூட ஆவியாகத் தோற்றமளிக்கும்
இத் திரித்துணர்வு - காட்சியாக மட்டுமல்லாது
கேட்சியாகவும் (Audible), தொடுவுணர்வு, முகர்வுணர்வு, சுவையுணர்வுகளாகவும் வகைப்படுகின்றது.
3. இல்பொருளுணர்வு (Hallucination) :
மருட்சியின் வீச்சு மிக அதிகமாகும்போது, ஒருவர் இல்பொருளுணர்வால் பாதிக்கப்படுகின்றார். இது புற – புலன்கள்வழி தூண்டல்கள் எவையுமின்றி மனத்தளவிலே
(Subjectively) தோன்றும் மாயவுணர்வாகும். இது
காட்சி, கேட்சி, தொடுவுணர்ச்சி, முகர்ச்சி, சுவையுணர்ச்சி ஆகிய நிலைகளில் வேறுபாடுகளுடையது. இவ் உணர்வு வாய்ந்தவர்கள்- தன்முன் தோன்றாத காட்சியைப்
பார்ப்பவராகவும், உருவாக்காத ஒலியைக் கேட்பவராகவும், இல்லாத மணத்தை நுகர்பவராகவும்,
தொடப்பெறாமலே தொடுவுணர்ச்சி பெற்றவராகவும் கூறுவர். மொத்தத்தில்
முழுமையான மாயவுணர்களுக்கு ஆட்பட்டவராக விளங்குவர்.
தமக்கு முன்னால் இறைவன் தோன்றியதாகவும், அருளினை
வழங்கியதாகவும், இறைவனிடம் பேசியதாகவும் கூறித் திரியும் துறவிகள், “சாமியார்கள்”,
“யோகிகள்” “பக்தர்கள்” எனபோர் அனைவருமே இல்பொருளுணர்வுக்கு
இரையாகிய மனநோயாளிகளே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
மூளை முழுக்கவும் மத மூடக் கருத்துகளையும், சமயஞ்சார்ந்த
புனை கதைகளையும் நிரப்பிக்கொண்ட எவருக்கும், எம் மதத்தைச் சார்ந்தோருக்கும் இந் நிலை
ஏற்பட்டுவிடும்.
இவ் வகை மூளைகழன்ற ஆட்களைத்தான் மக்கள் “மகான்”களாக்கி
விடுகின்றனர். ஏனெனில், பெரும்பாலான மக்கள்
பகுத்தறிவற்றவர்களாகவும், மூடநம்பிக்கையிலே மூழ்கிப்போனவர்களாகவும் இருப்பதுதான் அம்
“மகான்” (?)களுக்கு மூலதனமாகவுள்ளது. இவ் வகை
மனநோயாளிகளில் சிலர் ‘யானே கடவுள்’ (Jahova complex) என்னும் மனச்சிதைவுக்கு ஆளாகின்றனர். மனநோய் காப்பகத்தில் இருக்கவேண்டியவர்கள் வெளியுலகில்
பாபாக்களாகவும், ஜெகத் குருக்களாகவும், சித்தர்களாகவும், முனிவர்களாகவும், கடவுளர்
தூதுவர்களாகவும் திரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது பலருக்கு வியப்பளிக்கலாம்,
இதில் சிலர் மனநோய்க்கு உட்படாதவராக இருந்தாலும்
திட்டமிட்ட ஏமாற்று வேலைகள் மூலம், அறியாமையில் அலைகழிக்கப்படும் இம் மக்களைச் சுரண்டிக்
கொழுக்கும் மதப்போர்வை அணிந்த கொள்ளையர்களாகவும் செயல்படுகின்றனர். இவர்களிடத்தில் மக்கள் பணத்தையும், நேரத்தையும்
மட்டும் இழக்கவில்லை, சமயத்தில் மானத்தையும் உயிரையும் இழக்கின்றனர்.
இத் தெய்வப் புரட்டர்களை நம்பி ஏமாறும் படித்தவர்களும்,
படிக்காதவர்களும் பேராளம். இவ் வகை குருட்டு
வாழ்க்கையினின்று மீள்வதற்கு நமக்கு ஒரு தெள்ளிய அறிவுப் பாதை வேண்டும். யாருக்குத் தெளிவான அறிவுப் பார்வை வரும்? யார்
பகுத்தறிவைப் பயன்படுத்துகின்றார்களோ, யார் சிந்தனை வழிப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்ளுகின்றார்களோ,
யார் உண்மையை நோக்கிச் செல்ல முனைகின்றார்களோ, யார் அறிவியல் மனப்பான்மையோடு எதையும்
ஆராயும் போக்குடையவர்களாக இருக்கின்றார்ளோ அவர்கள்தான் அறிவார்ந்த வாழ்வியலைப் பெறமுடியும்.
அவர்கள்தான் தெளிவான புலக்காட்சியை (Perception) உடையவராக விளங்குவர். அவரே மனநலம் பெற்றவரும் ஆவார்.
சிறந்த மூளைத்திறனைப் பெற்றிருந்தும் – இம் மாந்தன்
ஏதும் அறியாத ஏமாளிகளாகவும், மதப் புரட்டர்களுக்கு எளிதில் இரையாகிப் போகின்றவர்களாகவும்
ஆன அவலம் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. இவ் வகைப்
பிற்போக்கு நிலையை நீக்குவதற்கு திட்டமிட்ட குமுகாய மாற்றத்திற்கான செயல்களில் முனைந்து
செயல்படவேண்டியது குமுகாயச் சிந்தனையாளர் அனைவரின் கடமையாகும். எனவே, சிந்தனையற்ற இம் மாந்தக் குமுகாயத்தை தூக்கி
நிறுத்தவேண்டியதும், அதற்கு முன்னதாக பின்னிப் பிணைந்து நிற்கும் மூடுமந்திரப் முட்புதர்களைக்
களையவேண்டியதும் நம் முன் நிற்கும் தொடர்ந்த பணியாகும்.