Friday, March 1, 2013

                                     அறிவார்ந்த வாழ்வியல்

     உலக உயிரினங்களிலேயே மாந்த இனந்தான் ஏற்றமிக்க வாழ்க்கையமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது.  மாந்த இனத்தைத் தவிர ஏனைய விலங்குயிரிகளின் இயக்கவியல், குறிப்பிட்ட ஒரேவகையான பாங்கமைப்பைக் கொண்டதாகவே உள்ளது.  ஏனெனின் அவற்றின் வாழ்வியக்கம் இயல்பூக்க (Instinct) அடிப்படையில் மட்டுமே அமைந்திருப்பதுதான் காரணம்.  புதிய புதிய செயல்கள் அவற்றால் கற்கப்பெறுவது இல்லை.  ஆனால் விலங்காண்டிக் காலத்தினின்றே புதியன பற்றி அறியவும், புதிய செயல்களைக் கற்கவும், புதிய ஆக்கங்களைச் செயற்படுத்தவுமான – திறன் வாய்ந்த மூளையமைப்பை மாந்த இனம் பெற்றுவிட்டது. 
     இத் திறன்வாய்ந்த மூளையின் துணை கொண்டேதான் இன்றுவரை, எண்ணிலடங்கா மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் இம் மாந்த இனம் பெற்று வந்தள்ளது. இத் திறன்மிக்க மூளையைப் பெற்றிருப்பினும், பெரும்பாலான மக்கள் தம் சிந்தனைத் திறனை வளர்த்துக்கொண்டவர்களாக இல்லை.  ஏனெனின், இதற்குக் காரணம் அம் மக்கள் வாழும் இடத்து, நல்ல கல்விச்சூழல் அமையாததே ஆகும். தலைமுறை தொடர்ந்த கல்வியை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத - கல்வி மறுப்பும் பெரிய காரணமும் ஆகும்.  பெருமளவு அறிவியல்  வளர்ந்தோங்கிய இக்காலக் கட்டத்திலும், மக்களில் பெரும்பாலோர் வாழ்வியல் பற்றிய துலக்கம் சிறிதும் இல்லாது செம்மறியாட்டுக் கூட்டமாகவே வாழ்ந்து வருகின்றனர்.
     இதனால்தான் இவர்களின் வாழ்வில் சரியான குறிக்கோளும் இல்லை; வாழ்வியல் பற்றிய மெய்மமும்(Philosophy) அறியப்படுவதும் இல்லை.  தம் வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர்வரும் சிக்கல்களுக்கு முறையான தீர்வுகாணும் திறனும் இல்லை,
     மேற்கூறிய நிலைப்பாட்டில், படித்தவர் படிக்காதவர் ஆகிய இரு பிரிவினருமே ஒரே இயல்பினராகவே உள்ளனர்.  போதுமான அளவும் அதற்குமேலும் கல்வி பெற்றோரும்கூட, அக் கல்வியைப் பெறாதோர் போன்றே, சிந்திக்கும் திறன் அற்றவர்களாகவும், சிந்திக்க மறுப்பவர்களாகவும் இருக்கின்றனர்,  கற்றவர்களாக இருந்தும் பகுத்தறியும் மனப்பாங்கற்றவர்களாகவே உள்ளனர்.  எவ்வளவு மெத்தப் படித்த படிப்பாளியாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்டத் துறையில் கூர்மையுடையவராக இருந்தாலும் அவர்களின் வாழ்கைக்கும் பெற்ற கல்விக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. 
     சிந்தனையைத் தூண்டும் கல்வி அல்லது சிந்தனையை வளர்க்கும் கல்விக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் எவ்வளவு தொடர்பு உள்ளது என்பதை, வளர்ந்த நாடுகளையே சான்றாகக் கொள்ளலாம்.  இந் நாட்டில், கற்கும் கல்விக்கும் சிந்தனைக்கும் உள்ளத்தொடர்பு மிகக் குறைவாகவே உள்ளது.  அத்தொடர்பும் மதமேறிய மனநோய்களால் அறுத்தெறியப்படுகின்றது.  முன்னேற்றம் முயற்கொம்பாகவே உள்ளது.
     எந்த நாட்டுக் குழந்தையாக இருந்தாலும், எந்த இனக் குழந்தையாக இருந்தாலும் நுண்ணறிவு ஈவில் (Intelligent quotient) பொதுவான விழுக்காட்டு நிரலளவே உள்ளனர்.  அப்படி இருந்தும் சில நாடுகள் மட்டும் வாழ்வியல் வளர்ச்சிப்போக்கில் பின்னடைந்திருக்கக் காரணம் என்ன என ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும்.
     அந்த வகையில் இங்குள்ள மாந்தவள ஆற்றல் முளையிலேயே கிள்ளியெறியப்படுகின்றது. பிற்போக்குத் தன்மையுடைய - நம் குடும்பச்சூழலும், குமுகச்சூழலும், மதச்சார்பு மனப்பாங்குடைய ஆசிரியர்கள் நிறைந்த பள்ளிச்சூழலும் குழந்தையின் மனவளர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் ஒருசேர சீரழிக்கும் மிகப்பெரிய காரணிகளாகவுள்ளன. வளர்ச்சிப்போக்கில் அக் குழந்தை, சிந்தனை மழுங்கியவனாக மாற்றப்படுகின்றான்.  தற்சார்பற்ற, தன்னம்பிக்கையற்றவனாகவும் ஆக்கப்படுகின்றான்.
     ஐம்புலன்கள்வழித் தூண்டப்பெற்ற தூண்டல்கள் அனைத்தும், மூளையின் உரிய செயற்பாட்டினால் ஒருங்கிணைக்கப்பெற்று உருவாக்கப்படும் கருத்துருவமே புலன்காட்சி (Perception) எனப்படும்.  இப் புலன்காட்சி குழந்தையின் ஐந்து அகவைக்குள் (வயது) பெரும்பாலும் நிலை நிறுத்தப்படுகின்றது.  இக் காலக்கட்டம் அக் குழந்தையின் கருத்து உருவாக்கத்திற்கு (Concept formation) அடிப்படையாகவும் அமைகின்றது.  எதிர்காலத்தில் அக் குழந்தையின் நடத்தை எவ்வாறு இருக்கும் என்பதும் இக் காலக் கட்டத்தில்தான் தீர்மானிக்கப்படுகின்றது. 
     கருத்துருவாக்கம் உருவாகும் இப்பருவத்தில்தான், வாழ்க்கைக்கு வேண்டாத கடவுள்கள் பற்றிய கதைகளும், பேய், பூதம் பற்றிய கற்பனைகளும், அவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கின்ற மூடநம்பிக்கைகள் நிறைந்த கோளாற்று எண்ணங்களும் – சுற்றிச்சூழ்ந்த பிற்போக்கு மனப்பான்மையரால் குழந்தையின் மூளையில் கருத்தேற்றம் (Suggestions) செய்யப்பெற்று, திணிக்கப்பெறுகின்றன.

     இளமை தொட்டே தொடரும் இவ்வகைக் கருத்தேற்றங்களால் தாக்கமுறப்பெற்ற இம் மாந்தன், அளவற்ற அச்சவுணர்வுகளுக்கும், ஆட்டிப்படைக்கும் எண்ணங்களுக்கும் (Obsessive Compulsive Thinking) ஆளாகின்றான்.  இவை அவனின் ஆழ்மனத்திலும் (Unconcious Mind) ஆழப்பதிந்து, நடத்தைக் கோளாறுகளை உண்டு பண்ணிவிடுகின்றன.  இன்றுவரை ஆராய்ந்த நிலையில், மாந்தரிடையே 323 வகை அச்சங்களையும்(Phobias), 102 வகை வெறிகளையும் (Manias) கண்டுள்ளனர்.
     நல்லறிவு சார்ந்த சூழலே பெரும்பாலும் கிட்டாமையாலும், இக் கேடுகெட்ட கருத்துருவாக்கங்களிலேயே தொடர்ந்த தோய்வாலும் இவனின் மூளை நரம்புகள் முறையற்ற பதிவுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்வியலே குலைவுற்று நிற்கின்றது.  சிந்தனைத் திறத்தாலன்றி வேறு எவற்றினாலும் இவனது நடத்தை, திருத்தமுடியாத அளவுக்கு அழுத்தமிகு ஆக்கநிலையுறுத்த செயல்களாகி (Conditionings) இவனைச் செயற்படுத்திச் செல்கின்றன.  இளமையில் ஏற்பட்ட பல்வேறு ஆக்கநிலையுறுத்த விளைவுகளின் அடிப்படையில்தான், ஒவ்வொருவரின் விருப்புகளும் வெறுப்புகளும் வேறுபட்டு நிற்கின்றன.  இவ் வகையில்தான் பலரிடமும் “பயமும் பக்தியும்” உருவாகி உருட்டுகின்றது !.
     வாழ்வின் ஊடே தொடர்ந்துவரும் உயிரிழப்பு அச்சம், மதிப்பிழப்பு அச்சம், பெருளிழப்பு அச்சம், துணையிழப்பு அச்சம், எதிர்பாராது வரும் இடர்சார்ந்த அச்சம், ஆகிய காரணங்களின் வழி எழும் மனக்குழப்பங்கள்தான் ஒருவரை சமய மூடப் புதைகுழியிலே தள்ளி, எப்போதுமே எழாவண்ணம் செய்துவிடுகின்றன.  இவ்வாறான மனநிலையில் வாழும் மக்கள் அவ்வப்பொழுது வரும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற, அதை எதிர் கொள்வதைவிடுத்து – சமயஞ்சார்ந்த சடங்குகளை நோக்கியும், சமயப்புரட்டர்களை நோக்கியும் தஞ்சமடைவது இயல்பாகிவிடுகின்றது. 
     இயற்கைத் திறத்தால் உருவான – சிறந்த மூளையாற்றலையுடைய இம் மாந்தன், பின்வரும் மூன்று வகையான உளத்தியல் செயல்பாடுகளினால் எவ்வாறு சிதைந்து போகின்றான் என்பதைப் பார்க்கலாம்.
      
      1. மருட்சி அல்லது பொய் எண்ணம் (Delusion) : குமூகவியலுக்குப் பொருந்தாத, ஏரணவியலுக்கு (தருக்கத்திற்கு) (Logic) எடுபடாத, நம்பகத்திற்குரிய அளவில் சான்றுகள் காட்டவே இயலாத, உண்மைக்குப் புறம்பான – பொய் நம்பிக்கையுணர்வே மருட்சி அல்லது பொய் எண்ணம் எனப்படுகின்றது.  இது அகவயத்தன்மை (Subjective) உடையதே தவிர புறவயத்தன்மை (Objective) உடையது அன்று.  கடவுள் நம்பிக்கை, ஆவி, பேய், பூதம் பற்றிய கருத்துகள், மாயமந்திரம், படையல், நல்ல நேரம்-கெட்ட நேரம், ஆகூழ்- போகூழ் (அதிஷ்டம்-துரதிஷ்டம்), கணியம்(சோதிடம்) ஆகிய இவையும், இவை போன்ற அனைத்தும் மேற்கூறிய மருட்சிசார்ந்த உளக்கோளாறுகளே ஆகும்.  இக் கோளாறு நிறைந்தவர்களின் பேச்சுகள், பொதுவாக – பகுத்தறிவுக்கு ஒவ்வாத, உண்மைக்குப் புறம்பான, சார்பு எண்ணங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
     2. திரித்துணர்வு (Illusion) : மருட்சி (அ) பொய்         எண்ணங்களுக்கு உட்பட்டவர்கள் எளிதில் திரித்துணர்வுகளுக்கு ஆளாவார்கள்,  மிரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகிவிடும்.  சாலையில் கிடக்கும் பிய்ந்து போன கயிறும் பாம்பாகத் தோற்றமளிக்கும்.  திரித்துணர்வு உடைய ஒருவருக்கு, இருட்டில் செல்லும்போது ஒரு குத்துச்செடிகூட அவருக்குப் பேயாகக் காட்சியளிக்கும்.  கொடியில் தொங்கும் சேலைகூட ஆவியாகத் தோற்றமளிக்கும்
     இத் திரித்துணர்வு - காட்சியாக மட்டுமல்லாது கேட்சியாகவும் (Audible), தொடுவுணர்வு, முகர்வுணர்வு, சுவையுணர்வுகளாகவும் வகைப்படுகின்றது.
     3. இல்பொருளுணர்வு (Hallucination) : மருட்சியின் வீச்சு மிக அதிகமாகும்போது, ஒருவர் இல்பொருளுணர்வால் பாதிக்கப்படுகின்றார்.  இது புற – புலன்கள்வழி தூண்டல்கள் எவையுமின்றி மனத்தளவிலே (Subjectively) தோன்றும் மாயவுணர்வாகும்.  இது காட்சி, கேட்சி, தொடுவுணர்ச்சி, முகர்ச்சி, சுவையுணர்ச்சி ஆகிய நிலைகளில் வேறுபாடுகளுடையது.  இவ் உணர்வு வாய்ந்தவர்கள்- தன்முன் தோன்றாத காட்சியைப் பார்ப்பவராகவும், உருவாக்காத ஒலியைக் கேட்பவராகவும், இல்லாத மணத்தை நுகர்பவராகவும், தொடப்பெறாமலே தொடுவுணர்ச்சி பெற்றவராகவும் கூறுவர்.  மொத்தத்தில்  முழுமையான மாயவுணர்களுக்கு ஆட்பட்டவராக விளங்குவர். 
     தமக்கு முன்னால் இறைவன் தோன்றியதாகவும், அருளினை வழங்கியதாகவும், இறைவனிடம் பேசியதாகவும் கூறித் திரியும் துறவிகள், “சாமியார்கள்”, “யோகிகள்”  “பக்தர்கள்” எனபோர் அனைவருமே இல்பொருளுணர்வுக்கு இரையாகிய மனநோயாளிகளே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். 
     மூளை முழுக்கவும் மத மூடக் கருத்துகளையும், சமயஞ்சார்ந்த புனை கதைகளையும் நிரப்பிக்கொண்ட எவருக்கும், எம் மதத்தைச் சார்ந்தோருக்கும் இந் நிலை ஏற்பட்டுவிடும். 
     இவ் வகை மூளைகழன்ற ஆட்களைத்தான் மக்கள் “மகான்”களாக்கி விடுகின்றனர்.  ஏனெனில், பெரும்பாலான மக்கள் பகுத்தறிவற்றவர்களாகவும், மூடநம்பிக்கையிலே மூழ்கிப்போனவர்களாகவும் இருப்பதுதான் அம் “மகான்” (?)களுக்கு மூலதனமாகவுள்ளது.  இவ் வகை மனநோயாளிகளில் சிலர் ‘யானே கடவுள்’ (Jahova complex) என்னும் மனச்சிதைவுக்கு ஆளாகின்றனர்.  மனநோய் காப்பகத்தில் இருக்கவேண்டியவர்கள் வெளியுலகில் பாபாக்களாகவும், ஜெகத் குருக்களாகவும், சித்தர்களாகவும், முனிவர்களாகவும், கடவுளர் தூதுவர்களாகவும் திரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது பலருக்கு வியப்பளிக்கலாம்,
     இதில் சிலர் மனநோய்க்கு உட்படாதவராக இருந்தாலும் திட்டமிட்ட ஏமாற்று வேலைகள் மூலம், அறியாமையில் அலைகழிக்கப்படும் இம் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் மதப்போர்வை அணிந்த கொள்ளையர்களாகவும் செயல்படுகின்றனர்.  இவர்களிடத்தில் மக்கள் பணத்தையும், நேரத்தையும் மட்டும் இழக்கவில்லை, சமயத்தில் மானத்தையும் உயிரையும் இழக்கின்றனர்.
     இத் தெய்வப் புரட்டர்களை நம்பி ஏமாறும் படித்தவர்களும், படிக்காதவர்களும் பேராளம்.  இவ் வகை குருட்டு வாழ்க்கையினின்று மீள்வதற்கு நமக்கு ஒரு தெள்ளிய அறிவுப் பாதை வேண்டும்.  யாருக்குத் தெளிவான அறிவுப் பார்வை வரும்? யார் பகுத்தறிவைப் பயன்படுத்துகின்றார்களோ, யார் சிந்தனை வழிப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்ளுகின்றார்களோ, யார் உண்மையை நோக்கிச் செல்ல முனைகின்றார்களோ, யார் அறிவியல் மனப்பான்மையோடு எதையும் ஆராயும் போக்குடையவர்களாக இருக்கின்றார்ளோ அவர்கள்தான் அறிவார்ந்த வாழ்வியலைப் பெறமுடியும். அவர்கள்தான் தெளிவான புலக்காட்சியை (Perception) உடையவராக விளங்குவர்.  அவரே மனநலம் பெற்றவரும் ஆவார்.
     சிறந்த மூளைத்திறனைப் பெற்றிருந்தும் – இம் மாந்தன் ஏதும் அறியாத ஏமாளிகளாகவும், மதப் புரட்டர்களுக்கு எளிதில் இரையாகிப் போகின்றவர்களாகவும் ஆன அவலம் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது.  இவ் வகைப் பிற்போக்கு நிலையை நீக்குவதற்கு திட்டமிட்ட குமுகாய மாற்றத்திற்கான செயல்களில் முனைந்து செயல்படவேண்டியது குமுகாயச் சிந்தனையாளர் அனைவரின் கடமையாகும்.  எனவே, சிந்தனையற்ற இம் மாந்தக் குமுகாயத்தை தூக்கி நிறுத்தவேண்டியதும், அதற்கு முன்னதாக பின்னிப் பிணைந்து நிற்கும் மூடுமந்திரப் முட்புதர்களைக் களையவேண்டியதும் நம் முன் நிற்கும் தொடர்ந்த பணியாகும்.  

Saturday, August 2, 2008

தாய்மொழி
மொழி என்பது விலங்கு குமுகத்தினிடமிருந்து மாந்த குமுகாயத்தை வேறுபடுத்திக் காண்பிப்பதும், மாந்த குமுகாயத்திற்கென்று-தனித்த சிறப்புமிக்க இடத்தினைப் பெற்றுத்தந்ததும், மாந்த குமுகாயத்திற்கே
அடிக்கல்லாக நின்று இயங்குவதுமான இயக்கவியலாகும்.
மாந்த இனத்திற்கென்று உள்ள குமுகாய வாழ்க்கையைத் தோற்றுவித்ததே மொழிதான். அத்தோடு குமுகாய நடத்தைக்கு உயிர்கொடுக்கும் காரணிகளான பண்பாடு, நாகரிகம், அறநெறி மற்றும் கற்கப்படவேண்டிய
கருத்துகள், கோட்பாடுகள் அனைத்தும் ஒரு தலைமுறையிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்கு மொழி மூலமே கிடைக்கின்றன. மொழி மட்டும் இத்தகைய ஓர் இடைப்பொருளாக நின்று
செயல்பட்டிருக்காவிடின் ஒருமரபினர் கற்ற அறிவுகள் அனைத்தும் அடுத்து வரும் மரபினர் பெற்று தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வழியேதும் இல்லாமல் போயிருக்கும். எனவேதான் மொழியென
ஒன்று இல்லாவிட்டால் மாந்த குமுகம் எனும் ஓர் அமைப்பே இருந்திருக்காது என்றும், ஆதிகால மக்களைப் போன்று தனித்தே வாழவேண்டியிருந்திருக்கும் என்றும் குமுகாய உளத்தியலர் ஆய்ந்துள்ளனர்.
மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றக் கருவிதான் என சிலர் எளிதாக, அறியாது கூறுவர். ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாற்றிக் கொள்வதற்கு மட்டுமே அல்லாது மாந்தரின் உணர்வுகள்,
எண்ணங்கள்,பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் அனைத்துக் கோட்பாடுகளையும் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குக் கைமாற்றித்தரும் உயர்ந்த கருவியாகச் செயல்படுவதும், மாந்தகுலம் முன்னேற்றத்தை
நோக்கிச் செல்வதற்குரிய காரணியாக விளங்குவதும் ஆகும். ஆகவே வாழ்வியலின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிக் கிடப்பது மொழிதான் என்பது தெள்ளிதின் விளங்கும்.
மனவெழுச்சி வழிச் சைகைகளாகவும், செய்கைவழிச் சைகைகளாகவும், குறியீட்டுவழிச் சைகைகளாகவும்தோன்றிய மொழி- இடப்பெயர்வுகளாலும், குழுப்பிரிவுகளாலும் பிரிந்து போன மக்கள் கூட்டம்,
காலவெள்ளத்தால் கரைந்துபோன நிலையில் - தத்தமக்கே உரிய இனக் குழுக்களின் அடையாளங்களாக உலகில் பல்வேறு மொழிகள் கிளைத்துப் பெருகின. அம் மொழிகளே அவ்வினத்துக்குரிய தாய்மொழியாக நின்று
நிலைத்தன.
பிறந்தது முதல் குறிப்பிட்ட சில ஆண்டுகள்வரை- ஒரு குழந்தைக்கு, பெற்ற தாயோ அல்லது வளர்த்த தாயோ அல்லது அணுக்க உறவோதான் மிக மிக நெருக்கமான உறவுடையவராக,
முதன்மையுடையவராக விளங்குகின்றார். இவரிடமிருந்தே அக் குழந்தை மொழியைக் கற்கின்றது; அல்லது கற்பிக்கப்படுகின்றது. ஆகவே அம்மொழி தாய்மொழி எனப்பெற்றது. பிறந்தவுடனே தாயும் தந்தையும் இல்லாது
இல்லாது போயினும், அக் குழந்தைக்கு, அதனின் தாய்மொழியை - அது வளர்ந்து வரும் சூழலாகிய குமுகாயமே தாயாகி நின்று வழங்குகின்றது.
ஒருவனின் வாழ்வியலையே தாங்கி நிற்கின்ற இத்தகு தாய்மொழியின் உருவாக்கக் காலம் பிறந்தது முதல் ஐந்தாண்டுகள். இது மிக மிக அடிப்படையானது. இக் காலக்கட்டத்தில்தான் ஐம்பொறிகளால் உள்
வாங்கப்படும் தூண்டல்கள் அனைத்தும் தாய்மொழி என்னும் ஒலிப்பதிவுகளால் (கணிப்பொறியின் எந்திரமொழி {Machine language}போன்று) உருவாக்கப்பெற்று மூளையில் பதிக்கப்பெறுகின்றது. இப் பதிவீடுகள்
அனைத்தும், குறிப்பாக ஐந்து அகவைக்குள் குழந்தைகளுக்கு முறையாக, செப்பமுற பதிபிக்கப்பெற வேண்டும். இவ்வரிய காலக்கட்டத்தைத்தான் நாம் பெறுமளவு தவறவிடுகின்றோம். தவறவிடுவது
மட்டுமல்லாது, வளர்ந்துவரும் குமுகத்தின் அறிவு ஆக்கங்கள் அனைத்தும் சிதைந்து போகுமாறு- கல்வியின் பெயரால்அயல்மொழிகளை திணிக்கச் செய்து அழிவு வேலைகளைச் செய்து வருகின்றோம்.
குமுகாய உளத்தியல் சார்ந்த சில உண்மைகள் - தாய்மொழி பற்றி மேலும் பல தெளிவுகளைத் தருகின்றன. வங்காள ஓநாய்ச் சிறுமிகள் பற்றிய ஆய்வு ஒன்று கூறுவதாவது.........'பிறந்து ஓரிரு மாதங்களே
ஆன இரு பெண் குழந்தைகள் ஓநாய் ஒன்றினால் தூக்கிச் செல்லப்பட்டு சில ஆண்டுகள் தன் குட்டிகளோடு வளர்த்து வந்ததைக் கண்ணுற்ற கிருத்துவ துறவி ஒருவர் அக்குழந்தைகளை மீட்டெடுத்தார்.
அந்நிலையில் அக்குழந்தைகள்- ஓநாயின் நடத்தைகளோடு, ஊலையிட்டு குரலெழுப்புவதைத் தவிர எதுவும் பேசத்தெரியாத நிலையிலேயே இருந்தனர். அத்துறவி பலவாறு முயன்றும், 15 அகவை வரை வளர்க்கப்
பட்ட அக்குழந்தைகள் - அதிக அளவு பதினாறு சொற்களை மட்டுமே பேசக்கூடியவர்களாக இருந்தனர்.'
இதே போன்று மற்றொரு ஆய்வு....... 'ஆப்பிரிக்க பழங்குடி மக்களால் காட்டில் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனை, இயல்பு நடத்தைக்கு கொண்டுவரமுயன்ற ஒரு பிரஞ்சு உளத்தியலர் மிகக்குறைந்த
அளவுக்குக்கூட பேசுவதற்கு, மொழியை அவரால் ஊட்டமுடியவில்லை.'
இவ்வாய்வுகளைப் பற்றி இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், குழந்தைப்பருவத்தினின்றே கற்கப்படுதாகிய மொழி செப்பமுற கற்பிக்கப்படவேண்டும் என்பதையும், பிற்கால சிந்தனைத் திறனை குலைக்கும்
வண்ணம் பல்வேறு அயல்மொழிகளை தாறுமாறான நிலையில் திணிப்பது எவ்வளவு கேடுவிளைவிக்கும் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான். இந்த வேலையைத்தான் இன்றையத் தமிழகம்செய்து
வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இன்று தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பெருகிவரும் அரைவேக்காட்டு ஆங்கிலப்பள்ளிகள் தாய்மொழியை ஒழித்துக்கட்டுவதும், புறக்கணிப்பதும் - தாய்மொழியால் நிலைநிறுத்தப்படவேண்டிய
சிறந்த ஆளுமைப் பண்பை சீரழிப்பதுமான அழும்புகளைச் செய்து வருகின்றன; எந்த மொழியும் சரிவரத் தெரியாத ஏதுங்கெட்ட குடிமக்களை உருவாக்கி வருகின்றன.
சோவியத்து நாட்டைச் சேர்ந்த வசீலி சுகம்லீசுகி என்னும் ஆசிரியர் ஒருவர் கூறுகின்றார்..........'சொந்த மொழியில் தேர்ச்சி பெறாமலும், அதன் அழகை உணராமலும் ஒருவன் இருந்தால் அவனுக்கு மற்ற
மொழிகளின்- களஞ்சியங்களில் உருவகம் கொண்டிருக்கின்ற செல்வம் எட்டாமலே இருந்துவிடும். ஒருவன் தாய்மொழியின் மென்மையை எந்த அளவுக்கு அறிகிறானோ அந்த அளவுக்குமென்மையாகத்
தாய்மொழிச் சொற்களின் பொருள் வேறுபாடுகளை அவன் உள்வாங்கிக் கொள்வான்; சொற்களின் அழகை அவ்வளவு விரைவாக அவனின் நெஞ்சம் ஏற்றுக்கொள்ளும்......' தாய்மொழி பற்றிய இவரின் கூற்று
எத்தகைய பொருள் ஆழமுடையது என்பது விளங்கும்.
மொழி பற்றிய இன்னும் ஓர் ஆழமான அறிவியல் பார்வையைத் தருகின்றார் உலகப் புகழ்பெற்ற உளத்தியல் அறிஞர் இவான் பாவ்லோவ். '.....சுற்றிலுமுள்ள உலகால் தோற்றுவிக்கப்படும் புலன்
உணர்வுகளும் கருத்துகளும் நமக்கு - இயல்பில், உருவ சைகைகள் என்பது முதல்நிலை சைகையாகும்; பேச்சு என்பது இரண்டாம் சைகையாகும். அதாவது, 'சைகைகளின் சைகைகளாக' ஆகின்றது. இதுவே
மாந்தனுக்கு உரித்தான தனிப்பட்ட உயர்மனப்பான்மையாகின்றது.....' ...'மாந்தனுக்கே உரித்தான, உயர்மனப்பான்மை என்பது இரண்டாவது சைகை மண்டலமான பேச்சு,வரைதல்,எழுதுதல், எண்ணல் ஆகும்....'
'.....மாந்தன் மற்றும் விலங்கினங்களின் மூளையின் நடவடிக்கைகளுக்கிடையிலான அடிப்படை வேறுபாடு, பேச்சை பயன்படுத்துவதில்தான் இருக்கின்றது. பேச்சு என்பது ஒரு முழுமையான மாந்த நிகழ்வாகும்;
இன வேறுபாடுகள் ஏதாவது இருப்பின் அது பேச்சுக்கான மூளைச்செயல்முறையில் வெளிப்பாடடையும்....'
இவ்வாறு கூறுவதிலிருந்து ஓர் இனத்திற்கான மொழி அல்லது அதன் தாய்மொழி முதன்மையானது என்பது புலப்படும். அத்தோடு தாய்மொழி என்பது ஓர் இனத்தின் வெற்றிக்கு மிக மிக அடிப்படையானதாக
உள்ளது மட்டுமல்லாமல் அதுவே அவ்வினத்திற்கு உரிய மொழியாகவும், பயன்பாட்டில் எளிய மொழியாகவும் விளங்குகிறது.
சிந்தனை என்பது மொழியின் உள்பேச்சு விளைவாகும். வாட்சனின் நடத்தைக்கொள்கையினர் மொழிவும் சிந்தனையும் ஒன்று என்றே கருதுகின்றனர். இதேபோல் மார்க்சு முல்லர் என்பார் மொழியும்
சிந்தனையும் மாந்தரிடத்து ஒரே சமயத்தில் தோன்றுகிறதென்றும், ஒன்றில்லாது மற்றொன்று தோன்றவியலாது என்றும் கூறுகின்றார்.
ஆக, சிந்தனைத் திறனை வளர்ப்பதென்பது மொழிதான் என்றவகையில், அதற்குத் தக்கமொழி எதுவெனின் அவரவர் தாய்மொழியே என்பதில் எவ்வகை ஐயப்பாடும் இல்லை. தாய்மொழி வழியே
சிந்தனையையும் அறிவையும் வளர்த்துக்கொள்வதே சிறப்பானதும், இயல்பானதும் ஆகும்.
தாய்மொழி என்பது ஒரு தாளில் போடப்படும் முதல் நேர்க்கோடு போன்றது. அந்த நேர்க்கோட்டை ஒட்டி எத்தனை நேர்க்கோடு வேண்டுமானாலும் இணையாகப் போட்டுக்கொள்ளலாம். அதாவது
தேவைப்படின் வேறு எந்த அயல் மொழியையும் செப்பமுறக் கற்கலாம். முதற்கோடே முற்றுங்கோணலாக இருப்பின் அடுத்து வரும் கோடுகள் எவ்வாறு சரியாக அமையமுடியும்? ஆதலின் மாந்த மூளையில்
அவரவர் தாய்மொழித்திறனே முதலாவதாக உருவாக்கப்படவேண்டும்; அதுவும் செப்பமுற உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதான் கற்கப்பெறும் அயல்மொழிகளும்கூட மிகவும் தேர்ச்சியுடையனவாக
இருக்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நன்னிலக்கடலையொட்டிய மேற்காசியப்பகுதியினின்று, எமுராபி மன்னனால்விரட்டப்பட்ட - சொந்த மண்ணை இழந்த எபிரேய மொழி பேசும் மக்களான
யூத மக்கள் பல நூற்றாண்டுக் காலமாக ஆங்கிலம், பிரஞ்சு,செர்மனி மொழிபேசும் நாடுகளில் ஏதிலிகள் போல் வாழ்ந்து வந்தனர். எங்கு வதிந்து வாழ்ந்துவந்தார்களோ அவ்விடத்து மொழியை
தாய்மொழியாகக் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டனர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் இங்கிலாந்துநாட்டின் உதவியால் இன்று - லெபனான், சிரியா, சோர்டான் நாடுகளுக்கு இடையிலான ஒரு
பகுதியை இசுரேல் நாடு என உருவாக்கி, வெற்றிக்கொடி நாட்டி வாழ்ந்து வருகின்றனர். இன்றைக்கு அவர்களின் முன்னேற்றம் யாராலும் தடுக்கமுடியாதபடி மிக முனைப்பாக உள்ளது. ஆங்குள்ள குடிமகன்
ஒவ்வொருவனும் பல்வேறு துறைகளில், பல திறமைகளைப்பெற்றவனாக வாழ்கின்றான். மிக குறுகிய காலத்தில் அவர்கள் இவ்வகை விரைந்த முன்னேற்றத்தை அடைந்தனர் என்பதை எண்ணிப்பார்க்க
வேண்டும். வழக்கற்று அழியும் நிலையில் இருந்த அவர்களின் தாய்மொழியான எபிரேயத்தை மீட்டெடுத்து, செப்பம் செய்து அம்மொழியிலேயே உலகின் அனைத்து அறிவையும் கொணரச்செய்து -
அம்மொழிவழியே அந்த யூத மக்கள் கல்வி கற்று நாட்டையும் மக்களையும் முன்னேற்றமடையச் செய்துள்ளனர். இவ் வரலாறு, நமக்கு கற்றுத்தரும் தாய்மொழிபற்றிய பாடமாகும்.
இந் நிலைகளைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலாதும், கவனியாதும் நம் தமிழகத்தின் கல்வியுலகம் கரவாகச் சென்று கொண்டிருப்பதும், நாட்டைப்பற்றியோ இனத்தைப்பற்றியோ மொழியைப்பற்றியோ
கொஞ்சமும் அக்கரை இல்லாத அரசியற் கொள்ளையர்களின் போக்கும், இவர்களுக்கேற்ற கல்வி வணிகர் பலரும் , தற்பொழுதுள்ள தமிழகத்தின் இழிநிலையைப் பயன்படுத்திக்கொண்டு சுரண்டிக்கொழுப்பதும்
தமிழகத்தின் எதிர்காலத்தையே சீரழித்து வருகின்றது.
போலி நாகரிகத்தாலும், அடிமை உணர்வாலும் கட்டுண்டு கிடக்கும் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டு மக்கள் பலரும் - தம் பிள்ளைகள் ஆங்கிலம் படித்துவிட்டாலே இன்ப உலகம் எதிரில் வந்துவிடும் எனும்
பேராசை கொண்டோராய் பித்தம் பிடித்து அலைகின்றனர். இவ்வகைப் போக்கு - அவர்களுக்குள்ளாகவே அறியாது செய்து கொள்ளும் குமுகாயத் தற்கொலை முயற்சியே அன்றி வேறில்லை.
இன்னும் 60 விழுக்காட்டுக்கும் மேலாக எழுத்தறிவற்ற மக்களாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. இந் நிலையில், தம் பிள்ளைகளை ஓரளவு படிக்கவைத்து முன்னேற்றிவிடலாம் என
எண்ணியிருக்கும் நடுத்தட்டு மக்கள் தமக்குள்ள சொத்தில் ஒரு பகுதியோ அல்லது பெரும் பகுதியோ விற்றும், அல்லது தமது வருமானத்தில் பெரும்பகுதியை இழந்தும் - இக் கல்வி வணகர்களின் வலையில்
விழுந்து அல்லலுறும்நிலை ஒரு பக்கம் இருக்க, படிக்கும் மாணவர்களின் கல்வி ஊடகமொழி ஆங்கிலமாக இருப்பதனால் அவர்களின் கல்வி முன்னேற்றம் விழலாய் விளைந்துபோய் நிற்கின்றது.
இவர்களை விடவும் மிகவும் வறுமையில் வாடும் பெறுவாரியான உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு,- இப்பொழுது கொடிகட்டிப் பறக்கும் இலண்டன் மாதிரிப் பள்ளிகளின் கல்வி கனவிலும் காணவியலா
ஒன்று.
இவ் இவல நிலையை சற்று விழிப்போடு பார்போமானால், கல்வி என்பதே மேல்தட்டு மக்களுக்கும், வல்லாண்மைச் சாதியர்க்கும், அரசியல் திருடர்களுக்கும் மட்டுமே என்ற புதிய 'வர்ணாசிரம' கொள்கையாகத்
தெரிகின்றது. தந்தைப் பெரியாராலும், அண்ணல் அம்பேத்காராலும் - பெருவாரி மக்கள் தொகுதியான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழிசெய்த முன்னேற்ற முயற்சிகள் யாவும்,
இன்று ஆங்கில வழிக் கல்வியின் பெயரால் பெரிதும் தடைபட்டு நிற்கும் போக்கை, நாம் மீளவும் ஆய்வு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தாய்மொழியைத் தவிர்த்து விட்டு, அயல்மொழிவாயிலாக முன்னேறியதாக உலகில் எந்த நாடும் இல்லை; அதற்கான வாய்ப்புக் கூறுகளும் இல்லை. தாய்மொழிவழிக் கல்வி ஒன்றினால்தான் அனைவருக்குமான
கல்வியும், சமன்மைக்கான உரிமைகளையும் பெறமுடியும்.
உலகமொழிகளுக்கெல்லாம் தாயாகவும், வேராகவும் நின்றுவிளங்கும் தமிழ்மொழியையும், உலகின் தலைசிறந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் நம் தமிழினம், பல நூற்றாண்டு காலம் நோயுற்று இருந்து
வருகின்ற நிலைமாறவும் - தலைநிமிர்ந்து முன்னேற்றப்பாதை நோக்கி நடையிடவும் வேண்டுமெனில் - இனிமேலும் காலத்தாழ்த்தம் இல்லாமல் தாய்மொழிக்கல்வியை விரைந்து நடைமுறைப்படுத்துவதே நம்மின்
உடனடிக் கடமையாகும்.

Monday, December 10, 2007

உலகத் தமிழர்களுக்கு வணக்கம் !

எங்கே சென்று கொண்டிருக்கின்றோம் !
வரலாற்றுப் படியும், அகழ் ஆய்வுகளின்படியும், இலக்கியம் மற்றும் மொழியியல் ஆய்வுகளின்படியும் தமிழினம் காலத்தாலும் கலை, பண்பாடு, நாகரிகம் இவற்றின் வளர்ச்சியினாலும் முந்தி இருப்பதை நாம் அறிந்து கொண்ட நிலையில், இன்றைக்கு சொந்த நாட்டிலே அடிமைகளாக, ஏதிலிகளாக இருந்து வருவது கொடுமையிலும் கொடுமையான இழிவாகும். உலகளவில், அறிவு செழிப்புற்ற இக் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்ற
சூழலிலும்கூட - நம்மை நாமே உயர்த்திககொள்ளமுடியாதவர்களாக இருப்பதும், விழிப்புணர்ச்சியற்றவர்களாக இருப்பதும் மிகவும் அவலத்திற்குரியதாகும். இந் நிலைகளை மாற்றுவதற்கு நாம் நிறைய போராட வேண்டியுள்ளது. இதுவே என் சிந்தனைச் செலவின் தொடக்கக் கோடாகும். நன்றி!